வால்பையனுக்கு கடுமை அகற்றப்பட்ட பதில்

(அன்பின் வால்பையன்,
உண்மையில் எம் முந்தைய நீக்கப்பட்ட இடுகையில் எழுத்துக்களை கடுமையாக்கி உம்மை வருத்தத்தில் ஆக்கியிருந்தால் அதற்காக உளமாற நான் வருந்துகிறேன். ஏன் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது நம்மிருவருடன் மற்றவர்களும் அறிந்ததே. தேவையேற்படின் அதற்காக தங்களிடம் மன்னிப்பு கோரவும் தயங்க மாட்டேன்.

எழுத்துக்களில் எமக்கும் தடித்தனமாய் எழுத இயலும். எனினும் அவை எம் கொள்கைக்கு எதிரானது. நாம் அழகான முறையில் எம் கருத்துக்களை எடுத்துச் சொல்லவும் விவாதிக்கவுமே எப்போதும் விரும்புகிறோம். எனவே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.)

ஒரு வாரத்துக்கு முன் பதிவர் நண்பர் சென்ஷி அவர்கள் வால் பையன் மற்றும் ராஜனுக்கு என்ற தலைப்பிலும் நண்பர் ஜிகே (கோவி. கண்ணண்) அவர்கள் வால்பையன் மற்றும் இராஜனுக்கு வேண்டுகோள்! என்ற தலைப்பிலும் வெளியிட்டிருந்த இடுகைகளை படிக்க நேர்ந்தது. அதன்பின் வால்பையன் அவர்களின் 'குர்ரானில் குஜிலி கும்பா" என்றஇடுகையும் படிக்க கிடைத்தது (அமீரகத்தில் அவர் பதிவு தடை செயயப்பட்டுள்ளதாம்). சென்ஷியுடைய, ஜிகேயுடைய பதிவுகளில் வால்பையன் கொடுத்திருந்த பின்னூட்டங்கள் அவரின் வாதங்கள் பதிலளிக்கப்பட இயலாத வாதங்கள் என்ற நிலையிலும் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அதற்காகவே இந்த இடுகை.

முதலில்
அன்பின் வால்பையன்.
ஒரே கேள்வியை அழகாகவும் கேட்க முடியும். அருவருப்பான முறையிலும் கேட்க முடியும். கனியிருப்பக் காய் கவராமல் எந்த விவாதத்தையும் அழகான முறையில் கொண்டு செல்வதுதான் நல்ல பண்பாடாக அமைய முடியும். எனவே உங்கள் இடுகையிலுள்ள அருவருப்பை அகற்றுங்கள். அதற்காக வருத்தம் தெரிவிப்பது நல்ல பண்பாடாக இருக்கும்.

சிலருக்கு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சில கோபங்கள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரை விமர்சிக்கும்போது கண்டிப்பாக சில பண்புகளை ஒழுக்கங்களை கடை பிடித்தாக வேண்டியது அவசியம். ஏனெனில், உங்களுக்கு பிடிக்கா விட்டாலும் தமிழகத்தின் கணிசமான மக்களால் தலைவர் என போற்றப்படும் தலைவர்களில் ஒருவர் அவர். அதற்காக அவரது தொண்டர்களாலேயே ஆட்டோ அனுப்பி கவுரவிக்கப்பட்டால், திமுக அனுதாபிகள் எல்லாம் தீவிரவாதிகள் எனப் பொருள் கொள்ளப்பட மாட்டாது. இது ஒரு உதாரணம்தான்.

அவற்றையெல்லாம் விட பல படிகள் மேலாய் முஹம்மது நபி (அன்னாரின் மீது சாந்தி தவழுவதாகுக) அவர்கள், இவ்வுலகத்தின் குறைந்தது ஐந்திலொரு பகுதி மக்களால் தம் உயிரினும் மேலாய் மதித்து போற்றப்படும் பெரும் தலைவர், வழிகாட்டி. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் எங்களுக்கு எங்கள் பெற்றோரை விடவும், மற்றெல்லா மனிதர்களை விடவும், பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது. அவரை விமர்சியுங்கள். ஆனால் அவற்றில் அவரது கண்ணியத்திற்கு களங்கம் தரும், தரம் தாழ்ந்த வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது அவசியம். அதுவே நற்பண்பு. அத்தகு விமர்சனங்களுக்கு தகுதியுள்ளோர் தேவையேற்படின் பதிலளிப்பர். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் 'பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம், கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை' எனும் வாதத்தை என் அனுபவம் ஏற்றுக் கொள்கிறது.

தரமற்ற வார்த்தைகளை கொண்டிருந்ததால் இவ்விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேர விரயம் செய்ய விருப்பமில்லாமல் இருந்தது. என்றாலும் உதாரணத்துக்காக சில பதில்கள் மட்டும்
//... ... ... தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர் பார்க்க.
மனைவி துணைவி ஸ்டைல் ... ... ...! அம்பது வயசுக்கு மேல இந்தாள ஐஸவர்யா ராயா கட்டும். பல்லு போன கெழவிக தான் கட்டும்! //
1400 வருடத்துக்கு முந்திய அராபிய கலாச்சாரம் பற்றி ஏதாவது தெரியுமா? அப்போதைய பெண்களின் நிலையைப் பற்றி ஏதாவது படித்திருக்கின்றீர்களா? உங்கள் பாட்டியோட காலத்தில் அவர்களின் நிலைமை எவ்வாறிருந்தது என அவர்களிடம் கேட்டுத் தெளிந்து, பின்னர், 1400 வருடத்துக்கு முந்தைய நாட்களில் பெண்களின் வாழ்வு எவ்வாறிருந்து இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.

நபி அவர்களது 25வது வயதில் அவரது முதல் திருமணம். 40வது வயதில்தான் அண்ணல் அவர்களுக்கு முதன்முதலாக இறைச்செய்தி வந்தது. அதன் பிறகான அவரது கடுமையான போராட்ட வாழ்வுக்குப்பின் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்குப்பின் மக்காவின் மக்கள் அவருடைய செய்திகளுக்கு செவி சாய்த்து கூடுதலாக இணையத் துவங்கினர். அப்போது அவரிடம் பேசப்பட்ட பேரத்தில் ஒன்று. அதை நீங்கள் விட்டு விட்டால் அதற்குப் பிரதியாக அரபுலகத்திலேயே அழகான பெண்களை (பெண்ணையல்ல - பெண்களை) உமக்கு மணமுடித்துத் தருகிறோம் என்பதாகும். யோசியுங்கள். அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்களை அவர்களே கட்டிக் கொடுக்க தயாராய்த்தான் இருந்தார்கள்.

அவர் மற்ற பெண்களை மணமுடித்த போது, உம்மையும் எம்மையும் போல் பக்கத்து தெருவில் வசிப்பவரே 'பையன் யாரு?' என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லை. அந்தக் காலத்திய (ரிஸஸனுக்கு முந்தைய) அமெரிக்காவாக இருந்த ரோம சாம்ராஜ்யமே அவரது பேரைக் கேட்டு கதி கலங்கியது. முடி சூட்டிக் கொள்ளா விட்டாலும் மாமன்னர்.

அடுத்து அவரது திருமணங்கள் காம இச்சைக்காக என நிறுவ //ஆயிஷா கூறினார். அல்லாஹ்வின் தூதர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாளை ... ... ... அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களை கைப்பற்றிக் கொண்டான்// என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு விட்டு
//அடச்ச! சிவ பூஜைல கரடி பூந்தா மாதிரி அருமையான நேரத்துல அல்லா பூந்து குட்டைய கொழப்பிட்டாருப்பா!// அதற்கடுத்து மேலும் பல அசிங்க வாதங்களை வைத்துள்ளீர்கள்.

நபியவர்களின் மரணத்தருவாயில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் போது, அது அவரைத் தமது உயிரினும் மேலாய் மதிப்பவர்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் என்பதை அறிந்து, அதற்கான விளக்கங்களை மேலும் அறிய முயற்சித்திருக்க வேண்டும். எங்கேயோ எழுதி வைத்தவைகளை படியெடுத்து, அதில் மேலும் பல அசிங்க வார்த்தைகளை சேர்த்து வைப்பது அறிவுடைமை ஆகாது.

நபியவர்கள் நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களிலும் மிஸ்வாக் எனும் பல் துலக்கும் குச்சியால் தம் பற்களை சுத்தம் செய்பவதை அதிகம் விரும்புபவராய் இருந்தார்கள். அது உங்களுக்கு கஷ்டத்தை தராது என்று இருந்திருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன் என்று சொல்லுமளவுக்கு இருந்தார்கள்.

அன்னார் இறப்பெய்தும் அந்த தருணத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டு, அடிக்கடி மயக்கம் வருவதும் தெளிவதுமாய் இருந்து, நடக்க முடியாமல் இருவரின் தோள்களில் தொங்கிக் கொண்டு, கால்கள் தரையில் இழுபட வீட்டை ஒட்டிய பள்ளிக்கு சென்றிருக்கிறர்கள். அத்தகு நிலையில் பள்ளியை ஒட்டிய ஆயிஷா அம்மையார் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் வீட்டுக்கு வந்திருந்த ஆயிஷா அம்மையாரின் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக் குச்சியை பார்க்கிறார்கள். அது வேண்டுமா என அம்மையார் கேட்க ஆம் என்பது போல பார்க்கின்றார்கள். அப்போது அம்மையார் அவர்கள் தம் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக்கை வாங்கி அதன் உபயோகப்படுத்தாத மறு முனையைக் கடித்து, நன்றாக மென்று மென்மையாக்கி நபி அவர்களின் வாயில் வைக்கின்றார்கள். இதுதான் 'அன்னாரின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலை' என்று அம்மையார் சொல்கிறார்கள். உங்கள் வாத்திலுள்ள தவறை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறென்.

அதற்கடுத்து இதற்கு துணையாக அபூதாவுதிலுள்ள ஒரு ஹதீஸை குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
அதில் 'எனது நாவினை சுவைப்பார்' என்ற வார்த்தை கூடுதலாக வந்துள்ளதால் அது தவறான ஹதீஸ் என்பதை விளக்கவும் விளங்கவும் பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. அபூதாவுது ஹதீஸ் புத்தகத்திலுள்ள தவறான ஹதீஸ்கள் நீக்கப்பட்டு சுனன் அபூதாவுது எனும் புத்தகம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

கடைசியில்
நேரான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் எப்போதும் உண்டு. தங்களின் முன் முடிவுகளைத் துறந்து விட்டு, திறந்த மனதுடன், உண்மைகளை அறியும் நன்நோக்குடன் மட்டும் அணுகுவோரால் அதன் உண்மைகளை அறிந்திட இயலும்.

இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-3

தலாக் விவாகரத்து இத்தா முதலியவை பற்றி நிறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இந்த பதிவிலேயே என் http://islamicfold.blogspot.com/2007/01/blog-post.html என்றுள்ள இடுகையின் கருத்துரை பகுதியிலும் தலாக் விவாகரத்து பற்றி உள்ளது. இயன்றால் பார்வையிடுங்கள்.

//ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது//
இதை இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கூவி விற்பீர்களோ!. மேலே மின்னணு பொறியியல் பட்டதாரி பாத்திமாவின் கணவர் விடயத்திலும் இதை தெளிவு செய்திருக்கிறோம். தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சியில் முத்தலாக் என்கிற விடயமே தவறு என்று ஆண்களும் பெண்களும் அறியத் துவங்கி விட்டனர்.

//இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.//
இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் தமது வீட்டிலேயே சிறிய நிகழ்ச்சியாக நடத்தி திருமணம் செய்து கொண்டாலும் அதை முறையாகப் பதிவு செய்து ஊர் மக்களுக்கு பொதுவில் அறிவிக்க வேண்டியது கடமையாகும். அதைப் போலவே குலாவும். அநதப் பெண் ஒரு பந்தந்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாள் என ஜமாஅத்தின் முன்னிலையில் அறிவிக்கப் பட வேண்டும். இதிலே அப்பெண்ணுக்கு பல நன்மைகள் இருக்கிறது.

ஒரு பெண் குலாவுக்காக அனுமதி கேட்டால், விசாரித்து, விளக்கம் சொல்லி, முடிவை மறு பரிசீலனை செய்ய அவளிடம் கோரலாம். ஆனால் அப்பெண் தன் நிலையில் உறுதியாக இருந்து குலாவை கேட்டால் அதை நிராகரிக்கும் உரிமை ஜமாஅத்துக்கோ அதன் தலைவருக்கோ சிறிதளவேனும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வார்த்தையிலிருந்து நீங்களே மாறுபடுவதைக் கவனியுங்கள் //ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. 'கல்லானாலும் கணவன்...' மலை ஏறிக் கொண்டிருக்கிறது.//
பெண்களுக்கும் இஸ்லாம் சரிவரத் தெரிய தொடங்கியதால் எற்பட்ட நல்ல விளைவுதான் இது.

பெண்ணுழைப்பு - இஸ்லாமிய கல்வியை அறிவதற்கான அவர்களின் உழைப்பு, அதன் மூலம் அவர்களில் சிலர் பெற்ற கல்வியும் வேலை வாய்ப்பும் என எடுத்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், குலம் தழைக்கவும் உள்ள ஒரு புனிதமான ஒப்பந்தம்தான் திருமணம். இந்த மகிழ்ச்சிகள் அவர்கள் குடும்ப வாழ்வில் இல்லாதிருந்தால் ஒப்பந்தந்தை முறித்துக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த உண்மைகள் உணரப்பட்டதால்தான் 'கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்' என்ற நிலை இஸ்லாத்தில் அவசியமற்றதாகி பெண்களுக்கு நல்வாழ்வு அமைய ஏதுவாகிறது.

//விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன.//
மஹ்ர் தொகை என்பது பெண்கள் தங்கள் கணவனால் கைவிடப்படும் நிலைமை ஏற்படும் போதும் அல்லது கணவனை இழக்கும் போதும் உறுதுணையாக இருக்கும் விதத்தில், அந்த அளவுக்கு அமைய வேண்டும். அதை மணப்பெண்ணே தீர்மானிக்க வேண்டும். மஹ்ரை கூட்டிக் குறைத்து பேரம் பேச மணமகனுக்கு அனுமதியுண்டே தவிர இவ்வளவுதான் தருவேன் எனக் கூற அதிகாரம் இல்லை.

மஹ்ர் தொகையைப் பற்றி ஓரளவு இஸ்லாமியப் பெண்கள் விளங்கி இருந்தாலும் அதை அவர்கள் சரிவர நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இதுவரை இங்கே நிலைமைகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

இத்தகைய காரணங்களினால்தான் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறையில் மதக்கோட்பாடுகளை விட்டும் வெளியேறாதபடி ஜமாத்துகளால் (பெரும்பாலும்) தீர்த்து வைக்கப்படுகின்றன.

//நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன.//
இந்த தீர்ப்பு இஸ்லாத்துக்கு எதிரான தீர்ப்பல்ல.

//ஜீனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.//
ஏனெனில் அது மற்ற மதத்தாரில் நடைமுறையிலுள்ள ஜீவனாம்சம் போன்றதில்லை. மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் என்று சொல்லி விட்டு அதை தர மறுப்பவனுக்காக மீண்டும் வழக்காட வழியில்லாத எத்தனையோ பேர் தத்தளிக்கின்ற நிலைமையில் அதை ஒரே முறையில் அல்லது ஜமாஅத்தார் முன்னிலையில் ஒரேயடியாக பெற்றுத் தருவதின் மூலம் எதிர்காலச் சிக்கலில்லாமல் போகிறது.

//குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு.//
குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள செலவுகளுக்கு முழுப்பொறுப்பும் ஆணுக்குள்ளதே. (பெண் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும்) நீயும் சேர்ந்துதானே பெற்றாய், நீ பாதிசெலவை ஏற்றுக் கொள் எனக் கூற முடியாது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பா பிரச்னையா என்பதை உங்கள் அறிவுக்கே விட்டு விடுவோம்.

//கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்//
இவையெல்லாம் கம்யூனிஸக் கற்பனைகளேயன்றி வேறில்லை. ஆண் பெண் இருவரது அணுக்கலப்பினால்தான் குழந்தை பிறக்கிறது என்பதை குர்ஆன் சொல்லித் தந்தே இருக்கிறது. எந்த தமிழ்த் தாயும் தன் குழந்தையை தான் வளர்ப்பதை ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதில்லை. சில விதி விலக்குகள் இருக்கலாம். அதைப் பொதுவாகக் கருத முடியாது.

//குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பதல்லை.//
எவ்வளவு சிறந்த ஆணாயினும், ஒரு பெண்ணைப் போல், அதிலும் குறிப்பாக பெற்ற தாயைப் போல் குழந்தைகளை வளர்ப்பதென்பது இயலாத காரியம். அதனால் பெரும்பாலும் தாயிடமே குழந்தைகள் விடப்படுகின்றனர். அந்தப் பெண்ணுக்கு வேறு வரன்கள் அமையும் பட்சத்தில் அக்குழந்தைகளுடனேயே திருமணம் செய்விக்கப் படுகின்றனர். இயலாத பட்சத்தில் தாய்வழி உறவினர்களே அக்குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.

ஓரளவு வயது வந்த குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் தந்தையுடன் செல்லும் நிலை ஏற்படும்போது, அது வளர்ந்து, விபரம் அறிந்து, வருவாய் ஈட்டக்கூடிய நேரத்தில்,
'இஸ்லாத்தில் ஒருவர் தம் தாய்க்கு தர வேண்டிய உயர்ந்த அந்தஸ்தும், அப்பெண் எப்படிப் பட்டவளாக இருப்பினும் அவளுக்குள்ள உரிமைகள் அவனது கடமைகள்' ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அவனுக்கு நினைவுறுத்தப்பட்டு தாய்க்கு சேவையாற்ற ஆர்வமுட்டப்படுகிறான். 'தாயின் காலடியே சொர்க்கம்' என்ற நிலை அவனுக்கு சொல்லித் தரப்படுகிறது. அதனால் இறைவனிடம் கிடைக்கவிருக்கும் உயரிய நிலைமை அவனுக்குச் சொல்லித் தரப்பட்டு தாய்க்குப் பணிவிடையாற்ற ஆர்வமூட்டப்படுகிறான்.

இஸ்லாத்தில் ஒரு மகனிடம் தாய்க்கு உள்ள உரிமை மூன்று பங்கென்றால் தந்தைக்கு ஒரு பங்குதான்- அவனை யார் வளர்த்திருந்தாலும்.
//பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது//
மஹ்ர் தொகையை விடக் கூடுதலாக எதையும் கொடுக்க வேண்டியதில்லை. அவன் கொடுத்திருந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் திரும்பக் கேட்கப் பட்டால் (சரியான முறையில் மஹ்ர் கேட்டுப் பெறப்படாததால்) குழந்தை வளர்ப்பு முதலிய காரணங்களுக்கான செலவினங்களில் அவை கணக்கிடப்படுகின்றன. இவையாவும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணில்லாத வகைதான். (மேலே கல்லானாலும் கணவன் விளக்கத்தையும் பார்வையிடவும்)

இத்தா – காத்திருத்தல்
இஸ்லாத்தைப்பற்றி சரிவர அறிய, ஆராய முயற்சிக்காமல் எவரோ சொன்னவற்றை பிடித்துக் கொண்டு, மார்க்ஸ் கடவுள் கெடுத்த அபின் போதையில்தான் இவரும் தள்ளாடுகிறார் என்பதை இவரது இந்த விளக்கங்களிலே தெளிவாகத் தெரியப்படுத்தி விடுகிறார்.

//'கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)' என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர//
இதற்கான ஆதாரத்தை தர இயலுமா? இஸ்லாத்தை சிறுமைப் படுத்தவல்லாது வேறெதற்காக இத்தகைய புனைச்சுருட்டுகள்?

//தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை//
இவையாவும் இவரது சொந்த கற்பனைகள் அல்லது மார்க்ஸிய கற்பிதங்களாக இருக்கலாம்.

//விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை//
இவராக சில கற்பனைகளை எழுதி விட்டு அதில் மேற்கொண்டு கேள்விகளை யாரிடம் கேட்கிறார்? கற்பனைக்கு சொந்தக்காரரான அவர்தான் அதற்கு பதில் தர வேண்டும். கற்பனை இல்லையென்றால் அதற்கான ஆதாரத்தை அவர்தான் தர வேண்டும்.

இத்தா என்பது காத்திருப்பு என்று இவரே விளக்கமளிக்கிறார். இதில் கர்ப்பபைகளில் உள்ளதை அறிவதும் இருக்கிறது. அதல்லாத வெறும் காத்திருத்தலும் உண்டு என்பதை 'கர்பப்பை இல்லாவிட்டாலுமா!' என்ற அவரது இடுகையில் அவர் எடுத்து வைத்த (65:4) குர்ஆன் வசனமே விளக்குகிறது.

"உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையுமாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்"

மாதவிடாய் நினறு போன வயதானவர்களுக்கும், மாத விடாயே வராதவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும் (சிறுமிகள் திருமணச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது) மூன்று மாத தவணை கொடுக்கப்பட்டுள்ளது. இதிலே கர்ப்பபைகளில் உள்ளதை அறிவது இல்லை. வெறும் காத்திருத்தல் சட்டம்தான் என்பது மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே புரியும்.

இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒவ்வொன்றும் நபித்தோழர்களால் அவ்வப்போது கேள்விகளாக கேட்கப்பட்டு தெளிவு பெறப்பட்டே வந்திருக்கின்றன. அதனால்தான் தெளிவாக சொல்லப்பட்டுள்ள இவற்றில் கேள்விகள் அவசியமற்றதாகி விட்டிருக்கிறது.

இதை மேலும் விளக்க:
ரமதான் மாதம் முழுதும் நோன்பிருப்பது கடமை. அதனால் பல பயன்கள் உண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. அது விளைவுகள்தான். அந்தப் பயன்கள் எமது நோக்கமல்ல. நோன்பிருக்க வேண்டுமென்கிற இறை கட்டளையை நிறைவேற்றுவதல் எனும் அடிபணிதல்தான் எமது முழு முதல் முக்கிய நோக்கம்.

அதுபோல காத்திருத்தலில் பல நல்ல பயன்கள் இருக்கிறது. என்றாலும் அவை எமது நோக்கமல்ல. இறை கட்டளைக்கு அடிபணிதல் என்பதுதான் நோக்கம்.

டிஸ்கி:
1. திரு. வினவு அவர்கள் தமது தளத்தில் 2010-ல் 'இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் திரு. சாகித் அவர்கள் எழுதி இருந்த இடுகையை எடுத்தது இட்டிருந்தார். அதற்கான கருத்துரை எழுதப்போய் அது மூன்று இடுகைளாக நீண்டு விட்டது.
2. இந்த பதில்கள் உங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும் இயன்றவரை எல்லா பகுதிகளுக்குமே பதிலளிக்கப் பட்டுள்ளதால் உங்களுக்கு மென்மேலும் வீரியமாய் எதிர்க்கத் தோன்றும் என்பதையும் நான் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். இந்த பதில்களால் உங்களை வருத்தமுறச் செய்வது எனது நோக்கமல்ல. உண்மையை அறிய முயற்சிக்கும் இது போன்ற கேள்விகளுள்ளவர்கள் மட்டுமே இதனால் பயனடைய முடியும். இவ்வாறு தெளிவு படுத்தவதன் மூலம் என்னளவுக்கு என் கடமையைச் செய்தேன் என்ற மகிழ்ச்சியும் இறை திருப்தியுமே என் நோக்கம். என்னால் இயன்றவரை நான் அறிந்தவரை பதிலளித்துள்ளேன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும் - 2

//இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?//
எத்தனை விரிவாக எடுத்துரைத்தாலும் அறிய முயற்சிக்காமல் முதல் கேள்விக்கே திரும்ப வரும் திமிர் கொண்டவர்களாக நிறைய பேர் இருப்பதுதான். தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும். இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு. ஆடு நனைகின்றதே என ஊளையிட்டு வெறி கொண்டு அழும் ஓநாய்கள்.

//சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.//
புர்கா என்பது ஏதோ கருப்புத்துணி என்று நினைப்பதால்தான் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. உடம்பை மறைக்கின்ற, அழகை, அலங்காரங்களை வெளிப்படுத்தாத முறையில் அணியும் துணி எதுவானாலும் அது புர்காதான். கருப்பு அங்கியே ஆனாலும் அது அவரது உடலின் கன, பரிமாணங்களைக் காட்டி பிறர் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருந்தால் அது இஸ்லாமிய நெறிமுறைக்குள் வராது.

இந்திரா காந்தி அம்மையாருக்கு தன் பிரதமர் கடைமைகளை ஆற்றுவதற்கோ, ஜெயலலிதா அம்மையாருக்கு தம் முதலமைச்சர் பணிகளை நிறைவேற்றுவதற்கோ, கவர்னர் பாத்திமா பீவிக்கு அவர் கடமைகளை செவ்வனே செய்வதற்கோ, அன்னை தெரசா அம்மையாருக்கு தம் சமூகப்பணிகளை ஆற்றுவதற்கோ, பிணிகளைத் துடைப்பதற்கோ, தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதிபா தேவி பாட்டிலுக்கு அவர் தம் கடைமையைச் செய்வதற்கோ இத்தகைய துணிகள் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களாக தம்மை முன்னிறுத்தும் சில காமாந்தகர்கள் கண்களுக்குத்தான் இது தடையாகிறது. அதனால் விவாதப் பொருளாகிறது

கடினமான உடல் உழைப்பை கொடுக்கின்ற வகையில் உள்ள வேலைகளை பெண்களிடம் கொடுத்து அவர்களின் இயல்புக்கு மாறாய் அவர்களைப் பிழிந்தெடுக்காதீர்கள். அவர்களின் உடலமைப்புக்கு ஏற்ற இயல்பான நாசூக்கான வேலைகளை மட்டும் அவர்களுக்கு கொடுங்கள். வேறு வழியின்றி அவ்வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தம் என்ற முறையில் இஸ்லாம் அவரது உடைக்காக அவர்களை கட்டாயப் படுத்துவதில்லை. ஜமாஅத்துக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களை அந்த நிர்க்கதியான நிலையிலிருநது விரைவில் வெளியேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வருதல் கடமையாகிறது.

//இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை//
கல்லூரி செல்லும் இஸ்லாமிய பெண்கள் அறிவு பெற்று கல்லூரிக்கு செல்லும் அதே வேளை அறிவு குறைந்து புர்காவும் இடுகின்றனரா? எத்தகைய வளைந்தொடிந்த சிந்தனை!.

இஸ்லாம் சரிவர புரியாதிருந்த நேரத்தில் பெண்களென்ன ஆண்களே கல்லூரிக்குச் செல்லாமலிருந்தார்கள். இஸ்லாம் புரிந்து விட்டதால் பெண் கல்விக்கு இஸ்லாம் தரும் மகத்துவம் தெரிகிறது. அதனால் இஸ்லாமிய ஒழுக்கத்தைப் பேணிக் கொண்டே கல்லூரிக்குச் செல்கின்றனர். இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணியவாறு இஸ்லாம் வலியுறுத்தும் கல்வியும் பெற முடிகின்ற போது அதில் தடை அவசியமற்றது எனப் பெற்றோரும் தெளிந்துள்ளனர்.

// திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.//
தங்களை கம்யுனிஸ்டுகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரை வேறு சிலர் கம்யூனிஸ்டுகளாக முகமூடி அணிந்தவர்களென சித்தரிக்கின்றனர். இது போல உள்ளவைதான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா, ஸகனாஸ், மதுரைச் சேர்ந்த பாத்திமா, திருச்சியைச் சேர்ந்த பானு முதலானோர். எல்லா இடங்களிலும் அது போன்றவர்கள் உண்டு. இவையொன்றும் முஸ்லீம்களில் மட்டும் உள்ளதல்ல.

புர்கா அணிந்து தம்மை அழகாக மறைத்துக் கொண்டு தம் தேவைகளுக்காக வெளிவர இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லையே.

//காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது.//
எதற்காக புர்கா அணிய வேண்டும் எனத் தெரியாமல் கை, கால்கள், உடம்பின் பாகங்கள் வெளித்தெரிய சிலர் அணியும் துணிகளை அவர்கள் என்ன பெயரில் அழைத்துக் கொண்டாலும் அது இஸ்லாமிய உடையாகி விடாது.

//தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்//
ஆம். முஸ்லீம்களுக்கு முதலில் இஸ்லாத்தை போதிப்பதில் ஓரளவு வெற்றி பெற வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
--------------------------------------------------------------------------------

//பெண் உழைப்பு//
கணவர்தான் இஸ்லாமிய குடும்பத் தலைவர். தலைவர் பொருள் திரட்டும்போது பெண்ணை குடும்பத்துக்காக பொருள் திரட்ட இஸ்லாம் கட்டாயப் படுத்தவில்லை. சொத்துகளை தனியாக அடையவும் அதை முறையாக நிர்வகிக்கவும் பெண்களுக்குள்ள உரிமையை இஸ்லாம் தடுக்கவுமில்லை.

இதில் இஸ்லாம் செய்துள்ள குறைகள் என்ன என்று விளக்கினால் தெளிவு படுத்தலாம்.

//உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்//
உங்கள் பிழைப்புக்கு முதலாளித்துவம் பிரபுத்துவம் எதுவானாலும் பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இஸ்லாமிய அறிவு பெற்ற நம் தமிழ் சமுதாய பெண்கள் 'இத்தனை பேசுகின்றீர்களே எங்கள் நிலைமையிலிருந்து நாங்கள் வெளிவர என்னென்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளீர்கள்?' என்று தங்கள் இஸ்லாமிய மற்றும் தார்மீக உரிமையை பொதுவில் வைக்கக் கூடிய திறன் பெற்று விட்டனர். அதனால் உழைக்கும் மக்களோடு எல்லோருக்கும் இஸ்லாமிய அறிவு இன்னும் சிறப்பாக சென்றடையத்தான் நாம் இப்போது அதிகம் முயற்சிக்க வேண்டும்.

//பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே 'பொட்டையைப்' போல் பிரிந்து வாழ்வதா?' சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்//
இஸ்லாம் புரியத் தொடங்கி விட்ட இந்த கால கட்டத்தில் தலாக் தலாக் தலாக் எனச் சொல்லி விட்டாலும் பிரிந்து விட முடியாது. ஒரு முறையாகவே கணக்கெடுக்கப்படும். அதனால்தான் இந்த அங்குசத்தை அவர் நீட்டத் தொடங்கினார். சரியான இஸ்லாமியத் தெளிவு நாட்டில் ஏற்படத் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் அப்போதே முடித்திருப்பார்.

//பாத்திமாவோ 'எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது' என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது//
இஸ்லாத்தில் அவருக்குள்ள உரிமையும் கடமையும் புரியத் தொடங்கி விட்டதாலோ என்னவோ அவரால் கவண்கல் வீச முடிந்தது. பொருள் முதல்வாதம் பேசிக் கொண்டிருந்தால், பொருளையும் இழந்து, யாராரிடமோ சிக்கி சின்னா பின்னமாகி இருப்பார்.

//நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.//
இஸ்லாமிய குடும்பவியலில் குடும்பத்தை நடத்த கணவர்தான் பொருள் கொண்டு வர வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புதான் மனைவிக்கு. தான் வேலை செய்து கொண்டே குடும்பத்தையும் சரி வர நிர்வகிக்க முடியும் என்ற நிலையிலிருக்கும் பெண்கள், தாம் பெறும் ஊதியத்தை அவர்கள் விரும்பிய நேர்மையான வழிகளில் செலவிடுவதில் தலையிட, கணவனுக்கு எவ்வித உரிமையுமில்லை. அவளாக விரும்பி அதிலிருந்து ஏதும் கொடுத்தால்தான் பெற்றுக் கொள்ளலாம். இவையனைத்தும் இஸ்லாமிய நெறிமுறைகளை பெண்கள் அறியத் தொடங்கியதால் விளைகின்ற நன்மைகள்தான்

//இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை//
இதிலே முதலாளித்துவம் எங்கு வந்தது? அவ்வப்போது முதலாளித்துவம், பிரபுத்துவம், உழைக்கும் வர்க்கம். காலணியாதிக்கம், அடிமைத்தனம் இதில் எதையாவது போட்டால்தான் கட்டுரையை யார் எழுதினார் என்று தெரியும் என்பதற்காக போட்டிருந்தால்... சரிதான் பரவாயில்லை.

இன்னும் வரும்

இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-1

//கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்//
அவருக்கு நீங்கள் நண்பன். அவர் மனைவிக்கு நீங்கள் தோழி இல்லையே. அவரது நீண்ட கால நண்பர் என்றதால் அன்பாகச் சொன்னார்கள். அதே தெரியாத ஒருவராக இருந்தால் "அவர் வீட்டில் இல்லை. எப்ப வருவாரோ தெரியாது" என்று முகத்திலறைந்தாற்போல் சொல்லி இருப்பார்கள்.

'அவர் எனக்கு சகோதரி மாதிரி' என்பதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.
'உடன் பிறந்த சகோதரியா? இல்லையே! இடத்த காலி பண்ணு' - இதுவே இஸ்லாமிய முறை.
இவ்விரண்டில் எது சரி என்று எங்காவது உங்களுக்குத் தெரிந்த இடத்தில் நண்பர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் இஸ்லாமா?
இல்லை. தவறு நடக்க ஏதுவான பாதைகளும் அடைக்கப்பட வேண்டும் - இதுதான் இஸ்லாம்.
இது பெண்களுக்கு மட்டுமான சிறையா? இல்லை. இருபாலாருக்கும் பொது. மற்றவர்கள் வீட்டுக்கு போனால் வெளியிலிருந்து ஸலாம் சொல். மூன்று முறை சொல்லியும் பதிலில்லையா? அவ்விடத்தில் நிற்காதே. போய் விடு.
உனக்கு மஹ்ரமில்லாத பெண்ணிடத்தில் தனித்திருக்காதே. ஒரு பெண்ணும் அவளுக்கு மஹ்ரமில்லாத ஆணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கே (மனதை வழிகேட்டில் இழுக்கின்ற) ஷைத்தான் இருக்கின்றான் - இது இஸ்லாம். (மஹ்ரம்- திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட உறவினர்கள். உதாரணமாக: பெண்களுக்கு - தந்தை, தமையன், மாமன் முதலியோர். ஆண்களுக்கு - தாய், தமக்கை, மாமன் மனைவி முதலியோர்)


//“மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.//
'சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். 'நல்ல பண்பு'

இஸ்லாமிய பெண்கள் அன்னிய ஆடவர் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம். அந்தளவு உடை எல்லா நேரத்திலும், குறிப்பாக தன் கணவர், குழந்தைகள் முன் அவசியமில்லை. குறைந்த உடையில் துணி விலக வாய்ப்புகள் அதிகம். எழுந்து மறைவான இடம் செல்வதற்கு இது முதல் முக்கிய காரணம்.

நீங்கள் சந்திக்க வந்தது அவரை. அவரைச் சந்திப்பதில் தடை இல்லை.
வீட்டுக்கு வந்தவரை உபசரிப்பது நல்ல குடும்பப் பண்பாடு. அவர்களால் இயன்றவரை உங்களை நல்ல முறையில் உபசரிக்கின்றார்கள்.
அவர்கள் குடும்பப் பெண்களை பார்க்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏன்?! அல்லது தேவையின்றி அவர்கள் ஏன் உங்களைப் பார்க்க வேண்டும்?!.

இத்தனை நாள் மாமா என்றழைத்து விளையாடியிருந்த பெண் (வயதுக்கு வந்து விட்டது என்பதற்காக) ஒரேயடியாய் விலகி விட்டால் வித்தியாசமாகத் தெரியும். அதனால் அம்மாவோட ஒட்டிக் கொண்டு உங்களை விசாரிக்கிறது. படிப்படியாக அதுவும் குறைந்து விடும்.

இதிலே என்ன குறையை கண்டு பிடித்தீர்கள். நல்ல பண்புகளைப் பழகட்டும் பேணட்டும். இருட்டிலிருந்து கொண்டு வெளிச்சத்தை பழிக்காதீர்கள்.
-----------------------------------------------------------------------------------

//உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன//
வண்ணாரப்பேட்டை, திருச்சி குத்பிஷா நகர், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில், பாளையங்கோட்டை விவசாயக் குடும்பங்கள் போன்றவர்களிடம் வீடுகளில் மறைவாக இருந்து கொள்ள வசதிகளில்லை என நீங்களே சொல்கிறீர்கள். அவர்களிடம் எண்ணமிருந்தாலும் வீடுகளில் வசதிகளில்லாததால் அப்படி இருக்கின்றார்கள்.

இஸ்லாம் எப்போதுமே ஒருவரது இயலாமைக்காக அவரைக் குற்றம் பிடிப்பதில்லை. வசதியுள்ளவர்கள் அவர்களது இயலாமையைப் போக்க வேண்டும் என்று பணிக்கிறது.

அவர்களும் வசதி வந்து விட்டால் அதாவது நடுத்தர நிலைமைக்கு வந்து விட்டால், அதன் பின்னர் நீங்கள் சொன்னதுதான்
"தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர்."

//எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.//
கஹாரின் தாயாரின் சாணம் சுமந்து விற்ற ஏழ்மை. அதனால் இந்தப் பண்பாடுகளைப் பேண முடியாத இயலாமை. வசதி வாய்ப்புகள் வந்ததும் தம்மை சரி செய்து கொண்டுள்ளார். இதிலென்ன தவறு.
-----------------------------------------------------------------------------------
//உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.//

இதுதான் பிரதானமாக நீங்கள் தவறிழைக்கும் இடம். ஒரு சில காலத்துக்கு முன் இஸ்லாம் சரிவர தெரியாதிருந்த போதுதான் பள்ளிவாசல்களில் சில்லறையை கொடுப்பதும், மக்களை நெருக்கியடிக்க வைத்து சில்லறைகளை விநியோகிப்பதும்தான் ஜகாத் (எனும் ஏழைகளுக்கான வரி) என நினைக்கப்பட்டிருந்தது. இப்போது அது (ஸதக்கா எனும்) சிறிய தர்மம்தான் அதனால் ஜகாத் வழங்கப்பட்டு விட்டதாக எண்ணி விடக்கூடாது என தெளிவாக அறியப்பட்டு விட்டது.

இஸ்லாமிய அமைப்புகளின் மூலம் உரியவர்களிடம் பெறப்பட்ட ஜகாத், அதைப் பெறத் தகுதியான (நீங்கள் கூறியுள்ளது போலுள்ள) ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவி செய்யப் படுகின்றனர். இன்ஷாஅல்லாஹ் இது தொடர்ந்தால் முஸ்லீம்களில் ஒரு பெரிய மாற்றம் நிகழும்.

எம் ஊருக்கு அடுத்த முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஒரு ஊரில் யார் வீட்டில் திருமணம் போன்ற எந்த விருந்து வைபவங்கள் நடந்தாலும் வசதியற்ற அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உணவளிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே உலமாக்களும் ஜமாஅத்தினரும் அவ்விருந்துகளில் கலந்து கொள்வர்.

முஸ்லீம்களுக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கும் இஸ்லாம் சரிவர புரிய வைக்கப்பட வேண்டும் என (இப்படி தலைகீழாக இல்லாமல் நேர்மையான முறையில்) நீங்களும் எங்களுடன் இயைந்து யோசிக்கின்ற காலம் விரைவில் வர இறைவனை இறைஞ்சுகிறேன்.
------------------------------------------------------------------------------------
இன்னும் வரும்

ரமதானில் சரி பார்க்க தினப்படிவம்

1. ஸஹ்ர் உணவை பிற்படுத்தி கடைசி நேரத்தில் (பஜ்ர் அதானுக்கு பத்து நிமிடம் முன்பு) உண்டீர்களா?
2. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?
3. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?
4. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?
5. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?
6. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?
7. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?
8. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?

9. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?
10. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?
11. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)
12. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?
13. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?
14. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?
15. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?
16. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?
17. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?
18. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?

19. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?
20. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?
21. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?
22. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?
23. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)
24. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?
25. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?
26. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?
27. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?
28. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?
29. உங்களுடைய உணவிலிருந்து உங்களை அடுத்துள்ளோருக்கும் நோன்பு திறக்க உதவினீர்களா?

29a. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?
30. நோன்பை அதன் முதல் நேரத்தில் துரிதப்படுத்தி திறந்தீர்களா?
31. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?
32. இரவுத் தொழுகையை (அல்லது தராவீஹ்) தொழுதீர்களா?
33. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?
34. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?
35. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?
36. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?
37. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?
38. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?
39. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?

வெள்ளிக்கிழமைக்கு (கூடுதலாக)
40. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?
41. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?

42. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?
43. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா?

ஒரு வாரத்துக்கு - சிறப்பாக
1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?

2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?
3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?
4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?
5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?

உண்மையை விரும்பாத அறிவிலிகளா!?

நான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.

அந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.

அப்போது நம் நண்பர், "ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே" எனக் கேட்டபோது, அவரோ, "நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா? நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா? ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.

என்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.

இறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.

அன்புடன்
சுல்தான்

ஜிஹாதி

இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தனித்துவம் வாயந்தவர்கள். நம் நாட்டில் முக்கியமான நான்கு நம்பிக்கையாளர் மத்தியிலும் சிலர் தீவிரவாதிகளாக உள்ளனர். கஷ்மீரில் முஸ்லீம்கள், நாகலாந்தில் கிறித்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், அஸ்ஸாமில் உல்பா இந்துக்கள். மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸல்களுக்கும் தீவிரவாதமே துணை. இதல்லாது முக்கியமாக காவி ஹிந்துத்வ தீவிரவாதிகள்.

நேர்மையான போரை ஜிஹாத் என்றும், அநீதியாக வன்முறை மூலம் ஒன்றுமறியாத அப்பாவிகளின் மேல் இழைக்கப்படும் கொடுமையை பஸாத்(Fasaad) என்றும் குர்ஆன் தெளிவாக வரையறுத்துள்ளது. நாட்டிலே குழப்பம் விளைவிப்பவன் பஸாதி. எவனொருவன் ஒரு மனிதரை நியாயமின்றி (பஸாத் மூலம்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் மேலும், எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' எனச் சொல்கிறது குர்ஆன்(வசனம்32 சூரா5).

இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்றது. அதற்கு அதன் கடுமைக்கேற்ப கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற நான்கு விதமான விதமான தண்டணைகளை குர்ஆன் பரிந்துரைக்கிறது.

குழப்பம் விளைவிக்கும் ஒரு பஸாதி தன்னை ஜிஹாதி எனச் சொல்லிக் கொள்வதன் மூலம் முஸ்லீம்கள் மத்தியில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். இவர்கள் மக்களுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்காக குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் தருகின்றனர். ஹிந்துத்வாக்களும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இரு பிரிவாருக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை.

இறை நம்பிக்கை சார்ந்த விடயங்களில் இரு பிரிவாருக்குள் வேறுபாடுகள் தோன்றி விட்டல் அதில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் மனிதனுக்கில்லை அது இறைவனுக்குரியது. "லா இக்ரா பித்தீன் - மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை" என்பதும் "லகும் தீனுக்கும் வலிய்யத்தீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு" என்பதும்தான் இஸ்லாத்தின் வழி. கத்தோலிக்க புலனாய்வுக்குப்பின் வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் தங்க இடம் கொடுத்தது தற்செயலாக நடந்ததல்ல. மேற்சொன்ன குர்ஆனின் நெறி.

முஸ்லீம் பெயர் தாங்கிகள் நடத்தும் சண்டைகள் எல்லாம் ஜிஹாத் ஆகி விடாது. எவ்வித உலக இலாபங்களையும் நாடாமல் இறைவனிடம் நன்மையை பெறுவதை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படும் எல்லா நல்லறங்களும் ஜிஹாத் தான். உண்மை அறிஞனுடைய நீதிக்கான பேச்சும், எழுத்தும், பொருள் உள்ளவர்கள் வறியவர்களுக்காகவும் நன்மையான வழிகளில் தர்மமாக செலவு செய்வதும் தன்னைத்தான் தூய்மையாக்கிக் கொள்ளுதல் எனும் பெரும் ஜிஹாத் ஆகும். சிறிய ஜிஹாதுகளில் உள்ளவைதான் போர்கள்.

தம் உளத்தூய்மைக்காக செய்யப்படும் ஜிஹாதைப் போல யார் வேண்டுமானாலும் ஜிஹாத் எனும் போர் அழைப்பை செய்ய முடியாது. இஸ்லாம் கடுமையான நிபந்தனைகளுடன் போரை அனுமதித்துள்ளது. அங்கே நம்பிக்கைத் துரோகம், தவறான வழிகளில் கொள்ளையடித்தல், உடல்களை சிதைத்தல், முதியோர், பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் ஆகியோரைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல், உணவுக்காக அன்றி ஆடு மாடுகளைக் கொல்லுதல் போன்ற யாவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடாது.

ஒரு நாடு தாருல் இஸ்லாம் ஆக இல்லாமல் தாருல் ஹர்ப் ஆக இருந்தால் அங்கே போர் செய்ய இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற முடியாதவாறு பிற மத ஆட்சியாளர்களால் துன்புறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாடு இருந்தால் அந்த நாடுதான் தாருல்ஹர்ப். மொஹலாயர் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியர்களும் இராஜபுதனத்தாரும் ஆட்சி செய்த காலம் கூட தாருல்ஹர்ப் எனச் சொல்லப்படவில்லை. முஸ்லீம்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகத்தான் இருந்தனர்.

நமது இந்தியா சோசலிச நாடு ஹிந்து நாடில்லை. நமக்கு முஸ்லீம் தனியார் சட்டத்தை நடைமுறைபடுத்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி வாழ நமது அரசியல் நிர்ணயச்சட்டம் உரிமை வழங்கியுள்ளது. மறுக்கப்படும் நமது உரிமைகளுக்காக நாம் நடத்தும் சிறு சிறு போராட்டங்களால் எல்லாம் நாடு தாருல் ஹர்ப் நிலையை அடைந்து விட்டதாக யாரும் நினைத்து விடக்கூடாது.

நீதியும் நியாயமும் மக்களை சமமாகப் பாவித்தலுமே குர்ஆன்படியான வாழ்வு முறையாகும்.
ஜிஹாத் எனச் சொல்லிக் கொண்டு பயங்கரவாதம் செய்வோர் எல்லாம் ஜிஹாதிகளில்லை பஸாதிகள்(வெறும் குழப்பக்காரர்கள்)தான்.